Dinaithal - தினஇதழ்

சட்டசபையில் ஸ்டாலின் ஆதரவு ; ஆனால் திமுக தலைவர் வெளியில் எதிர்ப்பு . என்ன நடக்கிறது திமுகவில் ?

சட்டசபையில் ஸ்டாலின் ஆதரவு ; ஆனால் திமுக தலைவர்  வெளியில் எதிர்ப்பு .   என்ன நடக்கிறது திமுகவில் ?

இது கொஞ்சம் பழைய செய்திதான் இருந்தாலும் திமுகவின் இன்றைய நிலையை , மாட்டு வண்டியை ஓட்டும் இரண்டு  தார்குச்சிகளை கையில் கொண்ட இருவர்  என்பதை நன்றாக காட்டுகிறது.

முரசொலியில்  திமுக தலைவர் கருணாநிதி எழுதிய  கடிதத்தை அப்படியே இங்கே பிரசுரிக்கிறோம் ;

உடன்பிறப்பே,

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு  அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.  பெயரைச் சூட்ட  சட்டப்பேரவையில்  தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வந்து  அனைத் துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக அதனை நிறைவேற்றியிருக் கிறார்கள்.   கழக சட்ட மன்றக் கட்சித் தலைவர், தம்பி தளபதி மு.க.ஸ்டாலினும்  அந்தத் தீர்மானத்தைக் கழகத்தின் சார்பில் வரவேற்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் என் நினைவு 1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி க்குச் செல்கிறது.   வி.பி.சிங் அவர்கள்  பிரதமராகப் பொறுப்பேற்ற பின்,  எனது அழைப்பின் பேரில்  சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது தான்,  நான் பேசும்போது மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு  அண்ணா பெயரும், காமராஜர் பெயரும் சூட்டப்பட வேண்டுமென்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.   உடனடியாக பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மேடைக்கு சற்றுத் தொலைவில்  பிரதமருக்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த (Hot Line)தொலைபேசியில்  டெல்லிக்குத் தொடர்பு கொண்டு, தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசினார். பின்னர் மேடைக்கு வந்து உரையாற்றும்போதுதான்  சென்னையில் உள்ள உள்நாட்டு விமானத் தளத்துக்கு காமராஜர் பெயரும்; வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என்று அறிவித்தார். அந்தப் பெயர்கள்தான் இன்றளவும் விளங்கி வருகின்றன.

  

 

அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு  விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின் சார்பில் முயற்சியெடுத்து, அதற்கு தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்ப வேண்டுமென்று மத்திய அரசின்  அமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தின்படி நேற்றையதினம் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தைக் கழகத்தின் சார்பில் நாம் வரவேற்ற போதிலும், அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த தமிழக முதலமைச்சரைப் பற்றி அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள்

தன் கடைசி நாட்களில் என்ன கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதைப் பற்றியும்,  அவரைப் பற்றி இன்றையதினம் ஆட்சியிலே இருப்பவர்கள் எப்படியெல்லாம் விமர்சித் தார்கள் என்பதைப் பற்றியும் ஒருகணம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படியிருந்தவர்கள் இன்றைய தினம் மாறி, இந்த அளவிற்கு விமான நிலையத் திற்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று முயற்சி எடுத்திருப்பது மனதிற்கு பெரும் ஆறுதலாக உள்ளது. 

1.1.1989 'மக்கள் குரல்’ இதழில், “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.  எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன்.   பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது.  சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் ஆகிவிட்டது  இப்போது.  இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காகப் பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்கமாட்டாள்.  மிகவும் கெட்டவள்” என்று எம்.ஜி.ஆர். சொன்ன கருத்தை “மக்கள் குரல்” ஆசிரியர்  டி.ஆர்.ராமசாமி அவரது பத்திரிகையில் அப்போதே   வெளியிட்டிருந்தார்.

22-1-1985 தேதியிட்ட “அண்ணா”  இதழில்,  “வயதுக்கும் தகுதியும் மீறிய பொறுப்பில் ஜெய லலிதாவை உட்கார வைத்தது என் தவறு.  எனக்குத் தெரியாமல் பல இடங்களில் என் பெயரை ஜெயலலிதா பயன்படுத்துவதை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது” என்று எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்து வெளியாகியிருந்தது.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்து பல்வேறு பொறுப்புகளை அளித்தார்.   தனக்குப் பிறகு ஜெயலலிதா இந்த அளவிற்கு உயர்ந்த இடத்திற்கு வருவதற்கே  எம்.ஜி.ஆர். அவர்கள்தான் காரணமாக இருந்தார். மாநிலங்களவை உறுப் பினராக்கி இந்தியா முழுவதும் அறியச் செய்தவரும் அவர்தான்.   ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது இறுதி காலத்தில் எந்த அளவிற்கு மனம் நொந்து கருத்துகளைத் தெரிவித்தார் என்பதைத்தான்  “அண்ணா” ஏடு, “மக்கள் குரல்” ஏடு ஆகியவற்றில்  வெளிவந்த செய்திகளே அப்போது எடுத்துக் காட்டின.

இன்னும் சொல்லப் போனால் சென்னை மாநகரில் தமிழக அரசின் சார்பில் புதிதாக  திரைப்பட நகர் ஒன்று உருவாக்கப்பட்டபோது,  அதற்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை யாவது, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பெயரையாவது சூட்ட வேண்டுமென்று தமிழகத் திரைப்பட உலகம் பெரிதும் எதிர்பார்த்து, அதற்கான கோரிக்கைகளை விடுத்த நேரத்தில்,  முதலமைச்சர் ஜெயலலிதா அதையெல்லாம் கேட்காமல் தன் பெயரையே  திரைப்பட நகருக்குச் சூட்டிக் கொண்டார்.   ஆனால் பின்னர் தி.மு.கழக ஆட்சி அமைந்த பிறகு,  அந்தத் திரைப்பட நகருக்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரே சூட்டப்பட்டு, இன்றளவும் அந்தப் பெயரிலேதான் அந்த நகர் விளங்கி வருகிறது.

16-4-1989 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற திரைப்படத் துறை விழா ஒன்றில் நான் பேசும்போது, “அரசியல் துறையில் ஆயிரம் மாறுபாடுகள் கடைசிக் காலத்தில் ஏற்பட்டாலுங்கூட, ஆரம்பக் காலந் தொட்டு நாற்பதாண்டு கால கலையுலக வாழ்க்கையில் ஒன்றாகப் பழகிய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பெயரால்,  தமிழக அரசின் சார்பில் தரப்படுகின்ற கலைஞர்களுக்கான ஒரு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்” என்று அறிவித்து, அது இன்றளவும், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.   

31-8-1989 அன்று  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவும், பல்கலைக் கழகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.  ஆனால் அடிக்கல் நாட்டப்பட்ட அடுத்த ஆண்டே கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்ட காரணத்தால் கட்டிடப் பணிகள் விரைவாக நடைபெறவில்லை.  ஆனால் 1996இல் மீண்டும் கழகம் பொறுப்பேற்ற பிறகு, கட்டிடப் பணிகளைத் துரிதப்படுத்தி 31-7-1998 அன்று குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு. கிருஷ்ணகாந்த் அவர்களை அழைத்து வந்து,  ஆறு கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு, கட்டிட முகப்பில் அமைக்கப் பட்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை யினை நானே திறந்து வைத்தேன்.  

1989ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதியினை ஒதுக்கி எம்.ஜி.ஆர். மறைந்து உடல் அடக்கம் செய்த இடத்தில்  எந்தவிதமான நினைவு  மேடையும் கட்டப் படாமல் கற்கள் மட்டுமே கொட்டிக் கிடந்த நிலையை மாற்றி உடனடியாக அந்த இடத்தை அழகுபடுத்த ஆணையிட்டேன். எம்.ஜி.ஆர். பலருக்கு உதவி செய்து  நிழலாக இருந்தார் என்பதை நினைவூட்டும் வகையில் குடைபோன்று  அந்த இடத்தை வடிவமைத்து உருவாக்கச் சொன்னேன்.   15-11-1989 அன்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் திறப்பு விழா கழக ஆட்சியிலே நடைபெற்று, நானே அதனைத் திறந்து வைத்தேன்.   அப்போது அதற்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்புத் தெரிவித்தபோது,  அந்த விழாவிலே பேசிய பி.எச்.பாண்டியன் அவர்கள், “அரசியலில் என்னதான் நல்லது செய்தாலும், அதைக் கொச்சைப்படுத்துகிற நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது வருந்தத் தக்கது.  ஒரே ஒருவர் மட்டும் இந்த விழாவை எதிர்க்கிறார்.  அவருடைய பெயரைச் சொல்லக் கூட நான் விரும்பவில்லை. நான் சபாநாயகராக இருந்தவன் என்ற முறையில் சில உண்மைகள் எனக்குத் தெரியும். புரட்சித் தலைவரைப் பதவியிலிருந்து இறக்க மூன்று முறை முயற்சித்தார். அவரே இப்போது இந்த ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார்.  இப்படி ஒரு பிழைப்புத் தேவையா?” என்றெல்லாம் பேசியது பழைய நாளேடுகளில் உள்ளது.  

அப்படிப்பட்ட ஜெயலலிதாதான் தற்போது  தன்னை மாற்றிக் கொண்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆரின் பெயரை  விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குச் சூட்ட முன் வந்திருக்கிறார்.

இவை மாத்திரமல்ல!  அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி,  ஜெயலலிதா

தன்கைப்பட எழுதி சேலம் வழக்கறிஞர் கண்ணன் மூலமாக  -  பிரதமர் ராஜீவ் காந்திக்குக்  கொடுக்க வேண்டுமென்று அனுப்பிய கடிதத்தில்; "The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life." அதாவது, “மிகுந்த செல்வாக்குடன் நான் பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம்.  நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.  எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததை யெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.

அது மாத்திரமல்ல;  அதே கடிதத்தில்,  "MGR himself who does not want to give me due importance does not want to induct me into the Cabinet. No one here can really dare to oppose him for without him they are Zeros."( எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவை யில் சேர்க்கவும் விரும்பவில்லை.  அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை.  ஏனென்றால் அவரில்லா விட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன்வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன்வந்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்றுதானே?  

ஆனால் இதிலே நமக்குக் கிடைத்த தகவல்கள் -  விமான நிலையம் என்றால்  அங்கே உள்நாட்டு முனையம் என்றும்  வெளிநாட்டு முனையம் என்றும் இரண்டுதான் இருக்க முடியும்!   உள்நாட்டு முனையத்திற்கு ஏற்கனவே பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் பெயர் சூட்டப் பட்டு, அது நடைமுறை யிலே இருந்து வருகிறது. தற்போது விரிவாக்கம் மட்டுமே செய்யப் பட்டிருப்பது  உள்நாட்டு முனையம்தான்.  அதற்கு மற்றொரு பெயர் என்பது சற்றுக் குழப்பமாக உள்ளது. இந்தக் கருத்தை நான் மாத்திரமல்ல;  பெருந்தலைவர் காமராஜரிடம் அன்பு கொண்டவர் களும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இன்றைய தினம் (16-4-2013) வெளி வந்துள்ள “டெக்கான் கிரானிகல்” ஆங்கிலப் பத்திரிகையில் "Naming Wars - Passengers say airport already named"என்ற தலைப்பில் வெளி வந்துள்ள செய்தி வருமாறு :- 

 

"What’s in a Name? This is what are passengers’ and airport officials asked when this newspaper tried to find out their reaction for the State Assembly’s Resolution to name the new domestic terminal after former Chief Minister M.G. Ramachandran. "Where is the question of naming the terminal again, when it is already named? The domestic terminal-1 at Chennai airport has been named after former C.M. Kamaraj and we have just added another terminal (II) to it. So, where does the question of renaming the extension crop up? It will only add to the confusion" said a senior airport official" (சென்னை விமான நிலையத்தின் புதிய உள்நாட்டு விமான முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்ட வேண்டுமென்று தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தைப் பற்றி கருத்துக் கேட்டபோது,  “பெயரில் என்ன இருக்கிறது?” என்று விமானப் பயணிகளும், விமான நிலைய அதிகாரிகளும் பதில் அளித்தனர்.  விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர், “உள்நாட்டு முனையத்திற்கு ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டு விட்ட நிலையில், அந்த முனையத்திற்கு மறுபடியும் பெயர் சூட்ட வேண்டுமென்ற வினா எங்கே எழுகிறது?  முதல் உள்நாட்டு முனையத்திற்கு  முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டுவிட்டது.  இப்போது இரண்டாவது முனையம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த  விரிவாக்கத்திற்கு பெயர் சூட்ட வேண்டுமென்ற கேள்வி எங்கே எழுகிறது? இது குழப்பத்தையே அதிகரிக்கும்” என்று கூறியிருக்கிறார்) என்று “டெக்கான் கிரானிகல்” ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

 

தமிழகமே மிகவும் உயர்ந்த  நிலையில் வைத்துக் கொண்டாடி இன்றளவும் போற்றிப் பாராட்டி வரும்  ஒரு தலைவரின் பெயரைச் சூட்ட நினைக்கும்போது, அதனால் எந்த விதமான குழப்பங்களோ, கருத்து வேறுபாடுகளோ ஏற்படாத வகை யில்  அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து வரவேற்கத் தக்க நிலையில்  செயல்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கடிதம்!

அன்புள்ள,

  மு.க.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?