பிரிவு: விளையாட்டு
ஐபிஎல் சூதாட்ட சம்பவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்களுக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவர் உட்பட 3 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் விண்டூ தாரா சிங்குடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. விண்டூ கூறிய அந்த வீரர்களின் பெயர்களை தற்சமயம் காவல்துறை வெளியிடவில்லை. அவர்களைப் பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று மும்பை காவல்துறை கூறியுள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 24 மே 2013 01:53
படிப்புகள்: 9
பிரிவு: விளையாட்டு
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் சூதாட்டகாரர்களிடம் இருந்து விலை உயர்ந்த கை கடிகாரங்கள், எலக்ட்ரானிக் பொருட்களை பாக். நடுவர் ஆசாத் ராவுப் பெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஆசாத் ராவுப்பிற்கு சூதாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்கக்கூடுமா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் ஆசாத் ராவுப்பிடம் விசாரணை நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் லண்டனில் நடை பெற இருந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து நடுவர் ஆசாத் ராவுப் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஆசாத் ராவுப் மீது பாலியல் புகார் கொடுத்த இந்திய மாடல் அழகி லீனா கபூர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர் பாக அவர் கூறியதாவது: ஆசாத் ராவுப் மீது நான் புகார் கொடுத்த போதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் போலீசார் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆசாத் ராவுப் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு படைத்தவர். எனக்கு பல்வேறு நெருக்கடிகள் வந்ததால் தான் அவர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றேன்.
2011ல் இலங்கையில் வைத்து தான் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட் டது. அப்போது ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது பல்வேறு நபர்கள் ஆசாத் ராவுப்பை வந்து சந்திப்பார்கள். இந்த சந்திப்புகள் அனைத்தும் பூட்டிய தனி அறைக்குள் தான் நடக்கும். நான் அதில் இருந்து ஒதுங்கியே இருப்பேன். ஒரு சில நபர்கள் சூட்கேசுடன் வருவார்கள். அவர் களை ஆசாத் ராவுப் அரு கில் உள்ள தனி அறைக்கு அழைத்து சென்று பேசுவார் என்றார். ஐபிஎல் சூதாட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மாடல் அழகியின் பகீர் தகவலால் ஆசாத் ராவுப் சர்வதேச போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 24 மே 2013 01:36
படிப்புகள்: 14
பிரிவு: விளையாட்டு
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர்.
எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமும், சீனிவாசனிடமும் விசாரணை நடத்தினர்.
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் சூதாட்ட தொடர்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த போலீசார் அவரது உறவினர் சிக்கியிருப்பதால் சீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். இன்று காலை 10 மணி முதல் சென்னை போட் கிளப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டில் இந்த விசாரணை நடந்தது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 23 மே 2013 03:21
படிப்புகள்: 25
பிரிவு: விளையாட்டு
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 23 மே 2013 02:08
படிப்புகள்: 31
பிரிவு: விளையாட்டு
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுடன் கைது செய்யப்பட்ட 14 சூதாட்டத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் வின்டு தாராசிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் நிழல் உலக தாதாவான தாவூத் இம்ராகிமுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்து வந்தனர். மேலும் அவரது நெருங்கிய கூட்டாளியான துபாயை சேர்ந்த சுனில் என்பவருக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் முக்கிய பங்கு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில் தாவூத்தின் வலதுகரமாக செயல்பட்டு வரும் சோட்டா ஷகில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சூதாட்ட தொடர்பை மறுத்துள்ளார். அந்த இதழுக்கு அவர் அளித்த பேட்டி:
ஆரம்ப காலக்கட்டங்களில் நாங்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான். தாவூத்தின் நம்பகத்திற்கு உரியவரான ஷரத் அன்னா என்பவர் தான் கிரிக்கெட் சூதாட்ட விஷயங்களை கவனித்து வந்தார். ஷரத் 2002ல் இறந்த பின்னர் நாங்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை விட்டு விலகிவிட்டோம். தாவூத் எங்கள் அனைவரையும் கிரிக்கெட் சூதாட்டத்தை விட்டு விலகிவிடுங்கள் என கடுமையாக எச்சரித்தார். அதன் பின்னர் நாங்கள் ரியல் எஸ்டேட்டில் களமிறங்கினோம். கடந்த சில ஆண்டுகளாகவே எங்கள் மீது எந்தவித புகாரும் எழவில்லை.
கடைசியாக நாங்கள் ஹன்சி குரோனி சூதாட்ட விகாரத்தில் ஈடுபட்டோம். ஆனால் அதன்பிறகு எதிலும் நாங்கள் தலையிடவில்லை. தாவூத்தின் சகோதரர் அனீஷ் உள்பட அவரது குடும்பத்தினர் யாருக்குமே இதில் தொடர்பு கிடையாது. தற்போது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் துபாயை சேர்ந்த சுனில் என்பவரை எங்களுக்கு நன்கு தெரியும். அதற்காக சூதாட்டத்தில் எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அர்த்தம் இல்லை.
சுனில் மட்டும் அல்ல சூதாட்டத்தில் ஈடுபடும் பலரையும் எங்களுக்கு தெரியும். கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் பணம் சம்பாதிக்க தாவூத் விரும்பவில்லை. மும்பை, டெல்லி போலீசாரின் பத்திரிகை பேட்டிகளை உன்னிப்பாக கவனித்தோம். சில சேனல்கள் தான் எங்கள் பெயரை போலீசாரின் வாயில் இருந்து வரவழைக்கின்றன. இதன் மூலம் அவர்கள் தங்களது டிஆர்பியை ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 23 மே 2013 00:52
படிப்புகள்: 20
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 4 வீரர்கள் கைதாகிறார்கள்6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களை ஸ்பாட் பிக்சிங் வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த 3 வீரர்களிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 5 நாள் காவலில் வைத்து விசாரித்த டெல்லி போலீசார் தற்போது மீண்டும் 5 நாள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐ.பி.எல் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் மேலும் 4 வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த 4 வீரர்களையும் போலீசார் கைது செய்ய இருக்கிறார்கள்.
ஸ்ரீசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 4 வீரர்கள் தொடர்பு தெரிய வந்தது. இதனால் டெல்லி போலீசார் அந்த 4 வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்த 4 வீரர்களும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தவிர்த்து இரண்டு அணிகளில் விளையாடுபவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த 4 பேரில் ஒருவர் வெளிநாட்டு வீரர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே கைதான 3 பேர் தவிர மற்ற வீரர்கள் யாரும் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டதில் ஈடுபடவில்லை என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதாக இருக்கும் இந்த 4 வீரர்கள் யார், எந்த அணியை சேர்ந்தவர்கள் என்ற பரபரப்பு அதிகமாக இருக்கிறது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 22 மே 2013 04:42
படிப்புகள்: 18
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் வின்டூ சிங்கிற்கு சென்னை ஐபிஎல் அணியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகரும் மல்யுத்த வீரருமான தாராசிங்கின் மகன் தான் வின்டூ சிங். சூதாட்டத் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வின்டூ சிங்கை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-மும்பை இடையேயான போட்டியில், தோனியின் மனைவி சாக்சியுடன் அமர்ந்து வின்டூ சிங் போட்டியை ரசித்துள்ளார்.
இதுதவிர விருந்துகளிலும் வீரர்களுடன் அவர் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. இதனால் ஐ.பி.எல் அணிகள் மற்றும் வீரர்களுடனான தொடர்பு பற்றியும் வின்டூ சிங்கிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 22 மே 2013 03:39
படிப்புகள்: 31
பிரிவு: விளையாட்டு
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், சூதாட்ட தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு 'ஸ்பாட்-பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை கடந்த வியாழக்கிழமை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சூதாட்டம் தொடர்பாக பல தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரர்கள் மற்றும் தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சூதாட்டத்துக்கு பலத்த பின்னணி இருப்பதும், பலகோடி ரூபாய் சூதாட்டத்தில் புரண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சூதாட்ட தரகர்களின் கைது தொடர்ந்து வருகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்ட மந்திரி கபில்சிபல் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையில் கபில்சிபலின் அறிவிப்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் சேர்மன் ராஜீவ்சுக்லா வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்ட மந்திரி கபில்சிபல் தெரிவித்து இருப்பது வரவேற்க தக்க நடவடிக்கையாகும்.
இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, சூதாட்டம் நடைபெறும் மற்ற விளையாட்டுகளுக்கும் பலன் தரும் முடிவாகும். கிரிக்கெட் 'ஜென்டில்மேன்' ஆட்டமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும். கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க நாங்கள் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 22 மே 2013 00:41
படிப்புகள்: 4
பிரிவு: விளையாட்டு
IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் அறை எண் 1213ல் இருந்து முப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகம் பிரபலமில்லாத மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள் இருந்ததாகவும், அவர்கள் ஸ்ரீசாந்துடன் 5 முதல் 6 பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீசாந்த் பல்வேறு பெண்களுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களும் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. டாமரின்ட் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் ஸ்ரீசாந்துக்கும் அவரது தரகர் ஜிஜு ஜனார்தனனுக்கும் சோபிடெல் ஹோட்டலில் 1213 மற்றும் 1214 ஆகிய எண்கள் கொண்ட அறைகளை முன்பதிவு செய்துள்ளது. அந்த அறைகளில் தான் அவர்கள் தங்கியிருந்தனர்.
அறை எண் 1213ல் தங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஜுஹுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 15ம் தேதி சென்றுள்ளார். மேலும் கார் லிங்க் ரோட்டில் உள்ல ஓர்ஆர்ஜி கிளப்புக்கு சென்ற அவர் அங்கு பல மணிநேரம் இருந்தாராம். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான டைரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதில் ஸ்ரீசாந்த் தனது நடவடிக்கைகளை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். மாடலிங் உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தனக்கு கிடைத்த பண விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதில் அவர் கேரளாவைச் சேர்ந்த 2 தரகர்களின் பெயர்கள் மற்றும் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூரைச் சேர்ந்த தரகர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்களை எழுதி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
சில தரகர்களின் பெயருடன் சேர்த்து சர், பாஸ், பிஜி என்று அவர் டைரிகளில் எழுதி வைத்துள்ளார். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து ஒரு லேப்டாப், ஐபேட், 2 செல்போன் சார்ஜர்கள் மற்றும் ரூ.75,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 22 மே 2013 00:38
படிப்புகள்: 71
பிரிவு: விளையாட்டு
மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பேட் செய்தது. ஹஸி, விஜய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 52 ரன் சேர்த்தனர். விஜய் 23 ரன் எடுத்தார்.
அடுத்து ஹஸியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு இறுதி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன் சேர்த்தது. சென்னை 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. ஹஸி 86 ரன் (58 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 82 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். அடுத்து 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 144 ரன் மட்டுமே எடுத்து தோற்றது.
ஸ்மித் 68, போலார்டு 24 ரன்கள் எடுக்க கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தோல்வியை சந்தித்த போதிலும் குவாலிபயர் 2வது சுற்றில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 22:44
படிப்புகள்: 20
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக இன்று அறிவித்துள்ளது.
புனே வாரியர்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான தனது உரிமத் தொகையை குறைக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்க மறுத்த பி.சி.சி.ஐ., குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமத் தொகையை செலுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் அந்த காலக்கெடு முடிந்தும் சகாரா நிறுவனம் அந்த தொகையை கட்டவில்லை.
இதனையடுத்து புனே அணி நிர்வாகம் அளித்துள்ள வங்கி உத்தரவாதத்தை, பணமாக்கும் நடவடிக்கையில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை புனே நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சகாரா நிறுவனம், புனே வாரியர்ஸ் அணியை ரூ.1702 கோடிக்கு வாங்கியது. 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 10:13
படிப்புகள்: 14
பிரிவு: விளையாட்டு
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்த் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி லேப்-டாப், செல்போன்கள், டைரிகள் போன்றவற்றை கைப்பற்றினார்கள். அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதில் ஸ்ரீசாந்த் இ-மெயிலில் ஏராளமான மாடல் அழகிகள், நடிகைகள், துணை நடிகைகள் போட்டோக்கள் குவியல், குவியலாக இருந்தது. இந்தப் போட்டோக்களை மும்பையைச் சேர்ந்த சினிமா துணை நடிகர்கள் ஏஜெண்டு ஒருவர் ஸ்ரீசாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் விளம்பர படத்தில் ஸ்ரீசாந்த்துடன் நடிப்பதற்காக இந்தப் போட்டோக்களை அவர் அனுப்பி இருந்தார். ஸ்ரீசாந்துடன் இந்த அழகிகளை நெருக்கமாக இருக்க வைத்து அதன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் அவரை ஈடுபடுத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.
இதற்காக மும்பையைச் சேர்ந்த துணை நடிகர்கள் ஏஜெண்டுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். அந்த சினிமா பிரமுகர் இ-மெயில் மற்றும் பேஸ்புக் மூலம் ஸ்ரீசாந்துடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதில் ஸ்ரீசாந்த் ஒரு தடவை பதில் அளிக்கையில் மேலும் அழகிகளை சப்ளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐதராத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், டி.சர்ட், மினரல் வாட்டர், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் ஸ்ரீசாந்துக்கும் ஒரு பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் அதிபர் தென்னிந்திய சினிமா உலகில் முக்கிய பிரமுகர் ஆவார். அவரிடமும் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் அந்த லேப்-டாப்பில் ஏராளமான டெலிபோன் எண்களும் அதில் சம்பந்தப்பட்ட நபர் பெயர் இல்லாமல் சங்கேத மொழியில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீசாந்துடன் இன்னொரு நபரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை போலீசார் ஆய்வு செய்தபோது அது சூதாட்ட புக்கி என்று தெரியவந்தது. லேப்-டாப்பில் ஏராளமான தகவல்கள் அழிக்கப்பட்டு இருந்தது. அவற்றை சைபர் செல் பிரிவு மூலம் கண்டுபிடித்து விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஸ்ரீசாந்த் கைதானபோது அவர் தங்கி இருந்த ஓட்டலின் கண்காணிப்பு காமிரா மூலம் பதிவான காட்சிகளையும் போலீசார் வாங்கிச் சென்று போட்டுப் பார்க்கிறார்கள். இதில் யார்-யார் ஸ்ரீசாந்த் அறைக்கு வந்து சென்றார்கள் என்ற விவரம் பதிவாகி உள்ளது. இதுவும் போலீசுக்கு முக்கிய ஆதாரமாக சிக்கியுள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 04:35
படிப்புகள்: 15
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட்பிக் சிங் சூதாட்டம் நடைபெற்று இருப்பதால் அந்தப் போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி சார்பில் வக்கீல் ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும், இந்த விசாரணை முடியும் வரை இறுதிப் போட்டி உள்பட எஞ்சிய 4 ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 04:08
படிப்புகள்: 25
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்று (பிளே–ஆப்) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிபோட்டிக்கு முந்தைய சுற்றுக்கு (பிளே–ஆப்) தகுதி பெற்றன.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில், லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்- 2வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டம் டெல்லியில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 லீக் ஆட்டங்களில் விளையாடி 11 வெற்றி (பஞ்சாப், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, புனே, பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக), 5 தோல்வியுடன் (மும்பை, புனே, மும்பை, ராஜஸ்தான், பெங்களூர் அணிகளிடம்) 22 புள்ளிகளுடன் ரன் ரேட் (+0.530) அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்று பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 16 லீக் ஆட்டத்தில் விளையாடி 11 வெற்றி (சென்னை, டெல்லி, புனே, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், சென்னை, கொல்கத்தா, புனே, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) 5 தோல்வியுடன் (பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் அணிகளிடம்) 22 புள்ளிகளுடன் ரன்ரேட் (+0.441) அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2–வது இடம் பெற்று பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 9 ரன் மற்றும் 60 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாபிடம் 50 ரன் வித்தியாசத்திலும், சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்தில் பெங்களூரிடமும் தோல்வி கண்டு இருந்தது. முந்தைய தோல்வியில் இருந்து மீள இரு அணிகளும் முயற்சிக்கும்.
சென்னை அணியில் மைக்ஹஸ்ஸி, கேப்டன் டோனி, விஜய், சுரேஷ்ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகிய பேட்ஸ்மேன்களும், அல்பிமோர்கல், அஸ்வின், மொகித் ஷர்மா, ஹோல்டர் ஆகிய பந்து வீச்சாளர்களும் சிறந்த நிலையில் உள்ளனர். மும்பை அணியில் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், பொல்லார்ட், கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்பஜன்சிங், மலிங்கா, குல்கர்னி, ஜான்சன் ஆகியோர் பந்து வீச்சிலும் சிறந்த நிலையில் இருக்கின்றனர். தெண்டுல்கர் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டத்தில் ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக வருகிற 26–ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி பெறும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு. வருகிற 24–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று போட்டியில், 22–ந் தேதி நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 5 முறையும், மும்பை அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்த போட்டி சோனிசெட்மேக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 00:26
படிப்புகள்: 5
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களில் அஜித் சண்டிலாவுடன் நெருங்கிய தொடர்புள்ள மணிஷ் குதேவாவும் ஒருவர். மணிஷ் குதேவா, 2003-2005ல் ரஞ்சி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். நாக்பூரை சேர்ந்த சுனில் பாட்டியா, கிரண்டோலே ஆகிய தரகர்களும் இவர்களுடன் கைதாகினர். அஜித் சண்டிலா ஒரே நேரத்தில் 4 தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி போலீசார் கூறினர்.
சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கியிருந்த போது அவர்களை யார் யாரெல்லாம் வந்து சந்தித்தனர்? என்பதை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட ஓட்டல்களின் சி.சி.டி.வி. பதிவுகளையும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக ரஞ்சிக் கோப்பை வீரர் பாபுராவ் யாதவை டெல்லி போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணிஷ் குதேவாவுக்கு நெருக்கமான பாபுராவ், சூதாட்ட தரகர் சுனில் பாட்டியாவை சண்டிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னையில் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பிரசாந்த், இன்று தனது வழக்கறிஞருடன் வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். டெல்லியில் பதுங்கியுள்ள மற்றொரு முக்கிய புள்ளி அகுஜா குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 20 மே 2013 09:27
படிப்புகள்: 35
பிரிவு: விளையாட்டு
ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கேரளாவைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு சில அழகிகளை சூதாட்டக்காரர்கள் சப்ளை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போலீசார் கைது செய்யும் போது உடனடிருந்த பெண்களும் போலீசாரின் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவர் தங்கியிருந்த வெவ்வேறு அறைகளில் போலீசார் தீவிர ஆய்வு நடத்தினர்.
அங்கு கிடந்த லேப்டாப், ஐபோட் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் மும்பையைச் சேர்ந்த லோட்டஸ் என்ற புக்கியையும் கைது செய்துள்ளனர்.
இந்த மிகப் பெரிய பிக்சிங் மோசடியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கோஷ்டிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் புக்கிகள் அனைவருமே தாவூத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் துபாய் எண்களையே இந்த புக்கிகள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதனால் இந்த விசாரணை துபாய்க்கும் விரிவடைய வாய்ப்பிருக்கிறது.ஐபிஎல் பிக்சிங் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதற்காக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படமாட்டாது என்று அதன் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கேரள மாநில லாட்டரி விளம்பரத்திலிருந்து அவரை நீக்கியிருக்கிறது கேரள அரசு.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 20 மே 2013 04:44
படிப்புகள்: 53
பிரிவு: விளையாட்டு
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல் பட்டது அம்பலமாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகாரை அடுத்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தியுள்ள போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அவ்ரங்கபாதில் நடத்திய சோதனையில் ரஞ்சி கோப்பையில் ஆடிய மனிஷ் உதை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவிதுள்ளனர். ரயில்வே அணிக்காக விளையாடிய பாபு ராவ் யாதவ் உள்ளிட்ட மேலும் பல உள்ளூர் வீரர்கள் தரகர்களின் ஏஜென்ட்களாக செயல்ப்பட்டுள்ளது தெரியவந்துள்ளத்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகின்றது.
அதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜல்லண்தரில் நடத்தப்பட்ட சோதனையில் சூதாட்ட தரகர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் சூதாட்ட கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிர படுத்தியுள்ள போலீசார் கோவை, திருப்பூர் சேர்ந்த 4 தரகர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மகாராஷ்டிரா மற்றும் கேரளா முதலமைச்சர்களின் பெயரை சொல்லி போலீசாரை மிரட்டியுள்ளது தெரியவந்துள்ளது. கைது நடவடிக்கையின் போது சொகுசு காரில் போதையில் மாடல் அழகி ஒருவருடன் வந்த ஸ்ரீசாந்தை போலீசார் மடக்கிய போது போலீசார் மீது செல் போன் வீசி எரிந்து மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 20 மே 2013 01:59
படிப்புகள்: 18
பிரிவு: விளையாட்டு
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதான கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த 30 வயதான ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் மற்றும் 53 ஓருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோதுதான் வேகப்பந்து வீரரான அவர் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டார்.
சூதாட்ட தரகரின் விருப்பதற்கு ஏற்றவாறு பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த 9-ந்தேதி நடந்த ஆட்டத்தில் அவர் 2-வது ஓவரில் 13 ரன்களை கொடுத்தார். இதற்காக ரூ.40 லட்சம் பணத்தை பெற்று இருக்கிறார். இந்த சூதாட்டம் தொடர்பாக ஸ்ரீசாந்திடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் மீது மும்பை போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் இருந்து லேப்டாப், பிளாக்பேரி, செல்போன், ஐபேட், டேட்டாகார்டு, 3 டைரி, ரூ.72,290 ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஸ்ரீசாந்திடம் மும்பை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீசாந்த் தங்கி இருந்த அறையில் மராட்டிய நடிகை ஒருவரும் இருந்து உள்ளது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் 3 அழகிகளும் பிடிப்பட்டனர். மராட்டிய நடிகையின் பெயர் விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. அவரிடம் ஸ்ரீசாந்த் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட வலையில் சிக்க வைக்க சூதாட்டதரகர்கள் நடிகைகள், அழகிகளை பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகும். ஸ்ரீசாந்த் இந்த விஷயத்தில் பலவீனமானவர் என்று கூறப்படுவதால் சூதாட்ட தரகர்கள் அழகிகள் மற்றும் மராட்டிய நடிகை மூலம் காரியம் சாதித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
ஸ்ரீசாந்தின் நெருங்கிய நண்பர் ஜிஜூ ஜனார்த்தன் என்கிற பிஜூ மூலம் சூதாட்ட தரகர்கள் இந்த செயல்கள் அனைத்தையும் அரங்கேற்றி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013 04:55
படிப்புகள்: 40
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பேர் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைதாகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய், லேப்-டாப்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லேப்-டாப்களில் என்னென்ன சூதாட்ட தகவல்கள் பதிவாகி உள்ளன என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கைதான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களை டெல்லி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த 2-வது நாள் விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன. குறிப்பாக ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணியில் இருக்கும் பெரிய முதலைகள் யார் என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கி இருக்கிறது. இது தவிர ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தரகர்கள் அனைவரும் ரகசியமாக ஒருங்கிணைந்து செயல்படுவது அம்பலமாகி உள்ளது.
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் 3 பேரும் நேற்று கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான பல தகவல்களை போலீசாரிடம் ஒளிவு மறைவின்றி கூறிவிட்டதாக தெரிகிறது. இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பல அடுக்கு தரகர்களுடன் சங்கிலி தொடர்போல் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் 15 போட்டிகளில் சூதாட்டம் நடந்து இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதை உறுதிபடுத்த போலீசார் ரகசிய விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐ.பி.எல். ஆட்டங்களில் மொத்தம் 9 அணிகள் ஈடுபட்டுள்ளன. இந்த 9 அணிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக இதுவரை நடந்துள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரள்வதும் அதில் கணிசமான தொகை கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் கிடைப்பதும் ஆதாரப்பூர்வமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீசார் மற்ற மாநில போலீசாருடன் இணைந்து நடத்தியுள்ள விசாரணைகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த சீசனில் விளையாடி வரும் ஐ.பி.எல். வீரர்களில் சுமார் 25 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடு பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த 25 வீரர்கள் யார், யார் என்ற தகவலை வெளியிட மறுத்து விட்ட டெல்லி போலீசார், அந்த 25 வீரர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து இருப்பதாக கூறினார்கள். சந்தேகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 25 வீரர்களில் 6 பேர் தங்களது எல்லா ஆட்டங்களிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே அவர்கள் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. டெல்லி போலீசாரிடம் நேற்று அங்கீத் சவான் வாக்குமூலம் கொடுக்கும் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மேலும் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவலை கூறியுள்ளார். அவர்கள் இருவரும் பேட்ஸ்மேன்கள். அதில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் வெளிநாட்டுக்காரர். இவர்கள் தவிர மற்ற ஐ.பி.எல். அணிகளில் உள்ள 8 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசாரின் சந்தேகப் பார்வையில், கிரிக்கெட் வீரர்கள் கெவான் கூப்பர், பிரட்ஹாக், சித்தார்த் திவேதி, ரகானே ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீதான சந்தேகம் உறுதி செய்யப்பட்டால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இத்தகைய அதிரடியால் ஐ.பி.எல். வீரர்கள், சூதாட்ட தரகர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 18 மே 2013 05:20
படிப்புகள்: 12
பிரிவு: விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தவிர வேறு எதுவும் கிடையாது.
தேர்தல் சமயங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்று சூதாட்டம் நடத்துவார்கள்.
தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் நாடு முழுவதும் வசதி படைத்த இளைஞர்கள் கிரிக்கெட் மோகத்தில் சிக்கி உள்ளனர். இதனால் கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல நடந்து வருகிறது. எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதில் இளைஞர்களிடையே ஆர்வமிகுதி ஏற்பட்டுள்ளது. இதை சூதாட்ட கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.
ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றி பணத்தை அள்ள திட்டமிடும் சூதாட்டக்காரர்கள் இதற்காக முதலில் வீரர்களுக்கு வலை விரிப்பார்கள். வீரர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. அவருக்கு நெருக்கமானவர்கள் யார்? நண்பர்கள் யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களுக்கு முதலில் விருந்து வைத்து குளிப்பாட்டுவார்கள்.
அடுத்து நண்பர் மூலம் வீரர்களை வலைத்து விடுவார்கள். முதலில் சாதாரண நட்பு முறையில் விருந்து இருக்கும். அழகிகள், நடிகைகளையும் நட்பு ரீதியில் சப்ளை செய்வார்கள். இதில் மயங்கிய வீரர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் அழகிகளுடன் உல்லாச காட்சிகளை படம் பிடித்து வைத்துக்கொள்வார்கள்.
முதலில் சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசுவார்கள். தங்கள் வலையில் சிக்கியது பவுலர் என்றால் பந்து வீச்சில் எப்படி நடந்து கொள்வது, சைகை காட்டும் வீதம் போன்றவற்றை முடிவு செய்து விடுவார்கள். பேட்ஸ்மேன் என்றால் அதற்கு தக்கபடி ரகசிய ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இதற்கு சம்மதிக்க தயங்கும் வீரர்களை சூதாட்டக்கும்பல் உல்லாச படங்களையும், வீடி யோக்களையும் காட்டி மிரட்டவும் தயங்க மாட்டார்கள். அப்படித்தான் ஸ்ரீசாந்த் சிக்கி இருக்கிறார்.
ஸ்ரீசாந்த்துக்கு பிஜூ என்பவர் நெருங்கிய நண்பராவார். ஸ்ரீசாந்த் கூடவே இருப்பார். மற்றொரு வீரரான சண்டிலாவும் அவருக்கு நெருக்கம். சூதாட்டக்கும்பல் முதலில் நண்பரைப் பிடித்து அழகிகளை சப்ளை செய்து மடக்கியது.
பெண்கள் விஷயத்தில் ஸ்ரீசாந்த் பலவீனமானவர் என்பதை தெரிந்து கொண்டு அவருக்கும் விருந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுபோல் 5 முறை அழகிகளை அனுப்பி வைத்து உல்லாசமாக இருக்க வைத்து விருந்து வைத்திருக்கிறார்கள்.
பெண்களை அனுப்பி வைத்துவிட்டு தரகர்கள் வீரர்களுக்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் வந்து சேர்ந்ததும் வீரர்கள் அதை உறுதி செய்து பதில் தருவார்கள். இந்த உரையாடல்களை போலீசார் ரகசியமாக பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டலில் கைது செய்யப்பட்டபோது அவருடன் ஒரு அழகியும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
போலீஸ் காவலில் ஸ்ரீசாந்த் மிகவும் இறுகிய முகத்துடன் இருந்தார். எந்த தகவலையும் சொல்ல மறுத்தார். படிப்படியாக மவுனத்தை கலைத்தார். தன்னை சுற்றி இருந்தது சூதாட்டக் கும்பல் என்று தெரியாமல் அவர்கள் வலையில் வீழ்ந்துவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சூதாட்ட தரகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் கம்ப்யூட்டர்களில் கிரிக்கெட் வீரர்கள் ஓட்டல் அறைக்குள் அழகிகளுடன் நுழையும் காட்சிகள் உள்ளது. எனவே தரகர்கள் திட்டமிட்டு வீரர்களை சிக்க வைப்பதற்காக முன் கூட்டியே அறைகளில் வீடியோ காமிராக்கள் பொருத்தி ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த வீடியோக்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 18 மே 2013 03:33
படிப்புகள்: 91