Dinaithal - தினஇதழ்

மார்க்சிஸ்டு தலைவர் உமாநாத் மறைவு : வைகோ இரங்கல்

மார்க்சிஸ்டு தலைவர் உமாநாத் மறைவு : வைகோ இரங்கல்



மார்க்சிஸ்டு தலைவர் உமாநாத் மறைவு: வைகோ இரங்கல்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான உமாநாத் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தனது செய்தியில் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுத் தியாகங்கள் செய்தவர். சென்னை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கத்தால் மூன்று ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்தார்.

உமாநாத் தலைசிறந்த மார்க்சிய சித்தாந்தவாதியாகவும், சீரிய எழுத்தாளர், பேச்சாளராகவும் முத்திரை பதித்தவர். பொது உடைமை இயக்கம் முன்னெடுத்துச் சென்ற அனைத்துப் போராட்டக் களங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சிறப்பாகப் பணியாற்றி, தகுதி வாய்ந்த நாடாளுமன்றவாதியாக மிளிர்ந்தவர்.

தொழிலாளர் வர்க்கத்தின் தோன்றாத் துணைவராகவும், தொழிற்சங்க இயக்கத்தின் மாபெரும் தலைவராகவும் திகழ்ந்தவர். கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் இனிமையாகப் பழகும் பண்பு நலம் கொண்டு இருந்தார்.

தோழர் உமாநாத் மறைவு, பொது உடைமை இயக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்திற்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தோழர் உமாநாத் அவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.





























































 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?