Dinaithal - தினஇதழ்

செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீது  கடும் தாக்கு!

செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீது  கடும் தாக்கு!

செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்த கருணாநிதிக்கு தமிழ் மொழி குறித்து பேச தகுதியில்லை என தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"'ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட்சி மரபும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், ஒரு மாயையை ஏற்படுத்தி, நெஞ்சம் மருகி, நெக்குருகி, புலம்பியிருப்பதோடு மட்டுமல்லாமல், திசை திருப்பும் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட நிறுவனமாகும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் ஆளுகைக் குழு உட்பட அனைத்து குழுக்களும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலமாகவே நியமிக்கப்படுகின்றன.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் தன் பெயருக்கு பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வேண்டி, அலுவல் வழித் தலைவராக ஆளுகைக் குழுவில் இடம் பெற்றார். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராய் பொறுப்பேற்ற பிறகு ஆளுகைக் குழு கூட்டத்திற்கு நேரம் அளித்தார்கள். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பொறுப்பை தட்டிக் கழித்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, தமிழர்களின் பாதுகாவலராக விளங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ் மொழியை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்றும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழுக்காக பணியாற்றிய தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், கபிலர் விருது, உவேசா விருது, கம்பர் விருது, சொல்லின்செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல், தமிழுக்காகப் பாடுபடும் தமிழமைப்புகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த்தாய் விருதையும், சிறந்த கணினித் தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதையும் ஏற்படுத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்து வருபவர். தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு தொய்வின்றி எடுத்துச் செல்ல ஏதுவாகவும், கவிதை, கட்டுரை, பேச்சுக் கலைகளில் மாணவ மாணவிகளை வல்லவர்களாக்கும் வகையிலும், ஆண்டொன்றிற்கு 200 பேரை தெரிவு செய்து 'இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை' எனும் சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

உலகத் தமிழ்ச் சங்கத்தினை மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கி உலகத்திலுள்ள தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்தும் வகையில் திட்டங்களைத் தீட்டி தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் முதல்வர். தமிழ் இலக்கியங்களை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திருக்குறள், பாரதியார் கவிதைகள் மற்றும் பாரதிதாசன் கவிதைகளை சீன மொழியிலும், அரபு மொழியிலும் மொழி பெயர்த்து, தமிழ் மொழியின் புகழை உலகமெலாம் பரவச் செய்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி மறைந்த தமிழறிஞர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் அவ்வையார், உவேசா, கால்டுவெல் போன்ற தமிழறிஞர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பெருமை சேர்த்தவர். சித்திரை முதல் நாளே புத்தாண்டின் தொடக்கம் என்று, வழி வழியாக வந்த தமிழர் மரபை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ் குறித்து வாய் கிழிய பேசும் கருணாநிதி, 1996 முதல் 2001 முடிய நடைபெற்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழிருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. 2001ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழிருக்கை நிறுவ ஒரே தவணையில் 50 லட்சம் ரூபாயை வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமைக்குரியவர். இப்படி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பெரும் தொண்டாற்றி வரும் ஜெயலலிதாவை குறை கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மைசூரிலிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தோம் என்று, ஏதோ மைசூரிலிருந்த மத்திய அரசு நிறுவனத்தை அப்படியே பெயர்த்தெடுத்து தமிழ்நாட்டில் கொண்டு வந்து வைத்ததைப் போல எழுதியிருக்கிறார் கருணாநிதி. மைசூரிலிருக்கும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இன்றளவும் அப்படியே, அங்கேதான் இருக்கிறது. அதிலிருந்து தமிழ் மொழிக்கான பிரிவு மட்டும் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு, கருணாநிதி, தான் ஆட்சியிலிருந்த காலத்தில் (2006-2011) ஏன் ஏறத்தாழ 4 ஆண்டுகளாக எந்தவித கட்டடமும் கட்டவில்லை. ஆனால், தன்னை தம்பட்டம் அடித்துக் கொள்ள தனது பெயரில் அறக்கட்டளை நிறுவிய சுயநலவாதி தான் கருணாநிதி.

தமிழின் பெயரில் கூட அந்த அறக்கட்டளையை நிறுவ மனமில்லாமல் தன் பெயரை வைத்துக் கொண்ட கருணாநிதிக்கு தமிழைப் பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனை என்ன? தமிழை வளர்க்க செய்த உருப்படியான பணிகள் என்ன? தமிழை வளர்க்க புதிதாக அவர் ஒன்றுமே செய்யவில்லை. தமிழை வளர்க்க என்ன செய்தீர்கள் என்று கேட்டால், நானே நேரில் இடத்தைத் தேர்வு செய்தேன் என்கிறார். செம்மொழி மாநாடு என்ற பெயரால் கோவையில் ஒரு தன்னல தம்பட்ட மாநாட்டை நடத்தி தன் புகழ் பாடிக் கொண்டதைத் தவிர தமிழை எங்கே அவர் வளர்த்தார்? தமிழ் எங்கே வளர்ந்தது?

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் உலகத் தமிழ் மாநாடு நடத்த முடியும் என்பது முறையாகும். ஆனால், முறையின்றி மாநாடு நடத்த இவர்கள் அனுமதி கேட்டபோது உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் மாநாடு நடத்த இது உகந்த நேரமில்லை என்று கூட சிந்திக்காமல் தம் புகழினையும், பெயரினையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தியது கருணாநிதி தானே.

கோவையில் நடைபெற்ற ஐந்து நாள் மாநாடு எந்த வகையில் தமிழுக்கு பயனளிப்பதாக அமைந்தது என்று இன்றைய நாள் வரை, உலகத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். மாநாட்டில் கவியரங்கம் என்ற பெயரால், தமிழ் மொழியின் பெருமையா பேசப்பபட்டது? கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெருமை தானே பேசப்பட்டது.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் பேரறிஞர் அண்ணா. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவானது. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் எம்.ஜி.ஆர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை உருவானது. எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா. முத்தமிழ், அறிவியல் தமிழோடு நான்காம் தமிழானது. உலகமே வியக்கும் வண்ணம் சென்னையில் அறிவியல் தமிழ்ப் பண்பாட்டு கருத்தரங்கத்தை நடத்திக் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா.

மூன்றாம் முறையாக முதலமைச்சராய் பொறுப்பேற்ற ஜெயலலிதா, அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாயில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியினை அவர்களது அல்லல் போக்கும் வகையில் 2,000 ரூபாயாக உயர்த்தினார். 2011-12, 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டுகளில் 81 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து காலந்தோறும் அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்து வருபவர் ஜெயலலிதா.

இந்நிலையில், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றி கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சற்றும் தொடர்பில்லாத கருத்துக்களை கூசாமல் வெளியிட்டிருக்கிறார். செம்மொழி நிறுவன அலுவலக கட்டுமானப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பி, கட்டடப் பணிகள் விரைவுபடுத்தப்படாமல் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

செம்மொழி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இப்பணியை மத்திய அரசின் பொதுப்பணித் துறை நிறுவனம் மேற்கொண்டுள்ளதே தவிர, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மேற்கொள்ளவில்லை. இந்நிறுவனத்தின் கட்டுமானப் பொறுப்பை ஏற்றுள்ள மத்திய பொதுப்பணித் துறையின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் மட்டும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்றுள்ளன. 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவனத்திற்கான கட்டடம் கட்ட மத்திய பொதுப்பணித்துறைக்கு ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக தனக்கு பொறுப்பளிக்கப்பட்ட போதும் தனக்கு அதிகாரம் ஏதும் வழங்கப்படவில்லை என்று முனைவர் அவ்வை நடராசன் கூறியதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர், செம்மொழி நிறுவனத்தினுடைய அலுவல் வழித் தலைவர் என்ற போதும், செம்மொழி நிறுவனத் துணைத் தலைவர் நியமனம் குறித்து தமிழ்நாடு முதலைமைச்சர் அலுவலகத்திற்குச் எவ்விதமான அலுவலகக் குறிப்பும் தராமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் என்பதை கருணாநிதி அறியவில்லையா?

செம்மொழி நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றுகின்ற ஆய்வு அறிஞர்களை வெளியேற்றிவிட்டு புதிதாக ஆய்வறிஞர்களை நியமனம் செய்ததைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஆய்வறிஞர்களை நியமிப்பதோ அல்லது அவர்களை வெளியேற்றுவதோ மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் ஆளுகைக் குழுவையுமே சாரும் என்பது கூட கருணாநிதிக்கு தெரியாதா?

பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகம் தற்போது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தும் அறியாமலும் புலம்பிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. சன் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து தனக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் வைப்பு தொகையை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைத்ததாகவும், அதைக் கொண்டு இதுவரை ஏன் விருது வழங்கப்படவில்லை என்றும் கருணாநிதி கேட்டிருக்கிறார். விருது வழங்கப்படுவதும், அதற்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்து, தேர்ந்தெடுப்பதும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆளுகைக்குட்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனமே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

செம்மொழி என்ற சொல் ஏதோ இவரால் தான் கண்டுபிடிக்கப்பட்டது போல கதறி இருக்கிறார் கருணாநிதி. விட்டால் செம்மொழி என்ற சொல் தனக்குத்தான் சொந்தம் என்றும், வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் Copyright வாங்கி வைத்துக் கொள்வார் போலும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்மொழியை செம்மொழியென்றது இன்று, நேற்றல்ல கால்டுவெல் முதல் பரிதிமாற் கலைஞர் வரை தமிழ் மொழி செம்மொழி என்று கூறியதை மறைக்க முயற்சிக்கிறார் கருணாநிதி.

செம்மொழி என்றால் அதற்கு ஆதாரம் காட்டுவது தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களே ஆகும் என்பதால்தான் ஜெயலலிதா, இந்தியாவிலேயே முதன்முறையாக தொல்காப்பியர் ஆய்விருக்கை நிறுவியதுடன், மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம் அமைத்து தமிழின் தொன்மையை உலகறிய செய்திருக்கிறார்கள். எனவே தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, தன்னையே அன்னைத் தமிழ் நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் ஜெயலலிதா. செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்த கருணாநிதிக்கு தமிழ் மொழி குறித்து பேச எவ்விதத் தகுதியும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?