Dinaithal - தினஇதழ்

திருவள்ளூர் விபத்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லக்ஷம் - முதல்வர் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி-1 கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கின் சுற்றுச் சுவர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று (6.7.2014) அதிகாலை சுவரினை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், அந்தக் குடிசைகளில் தங்கியிருந்த 10 கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இது பற்றி இன்று காலை அந்த கிராமத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் துயரம் சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பால்வளத் துறை அமைச்சர் ஏ.மூர்த்தி மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஞ.வேணுகோபால் ஆகியோருக்கு நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், அவசர மீட்பு ஊர்திகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், தேவையான மருத்துவ அலுவலர்கள் ஆகியோரை உடடினயாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நாகராஜ் என்பவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் ஆணையிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

அரசு செலவில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் நான் ஆணையிட்டுள்ளேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது  

இந்திய எல்லையான கோடியக்கரை தென்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளில் இருந்த 20 -க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறை போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை நீத்மன்றத்தில் ஆஜர்படுத்த பட உள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்தான் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா, அல்லது விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியும்.

தொடர்ச்சியாக ராமேஸ்வரம் மீனவர்கள், புதுக்கோட்டை மீனவர்கள், ஜெகதாபட்டினம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு தலையீட்டு ஒரு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீதான வழக்கு : தமிழக அரசு உயர்நிதிமன்றதில் வாதம்

கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தற்போது உள்ள சூழ்நிலையில் திரும்ப பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.

மேலும், சூழ்நிலை மாறினால் வழக்குகளை திரும்ப பெற அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

இதே போல் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்ளவது தொடர்பான வாதமும் இன்று நடைபெற்றது. இவ்விரு வழக்குகளின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?